பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 25 ஆகஸ்ட் 2024 அன்று ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இப்பொதுக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு தீர்மானங்கள்
2023-2024ம் ஆண்டிற்கான பொதுக்குழுக்கூட்டம், ஆண்டறிக்கை, வரவு- செலவு கணக்கு சமர்பித்தல் மற்றும் பணிஓய்வு பெற்றவர்களுக்குப் பாராட்டுவிழா என்ற முழுநாள் நிகழ்வை சிறப்பாக நடத்திக் கொடுத்த நான்காம் மண்டலத்தின் பொறுப்பாளர்கள், இடமளித்து சிறப்பான விருந்தோம்பலை நல்கிய வெள்ளாளர் மகளிர் கல்லூரிக்கிளை உறுப்பினர்கள் இவர்களை ஒருங்கிணைத்து தொய்வின்றி பணியாற்றிய பேரா. பசுபதி இவர்கள் அனைவருக்கும் பொதுக்குழு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டம், 1976, அதன் விதிகளில், உரிய திருத்தங்களை கொண்டுவர, சட்டப்பூர்வ திருத்தக்குழுவினை (Amendments Committee) உடனே அமைத்திட வேண்டும் என தீர்மானிக்கலாகிறது.
தனியார் கல்லூரியில் மாணவர் சேர்க்கை “கல்லூரி முதல்வர்களின் அதிகாரத்திற்குட்பட்டது” (exclusive rights of the Principal) என்பதை திருத்தி, “ஆண்டுதோறும் அரசு வெளியிடும் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டது” (Admission Guidelines) என்பதை உறுதி செய்திட புதிய அரசாணை வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.
அரசு உதவி பெறும் கல்லூரிகளின் உதவி பெறும் பாட வகுப்புகள்(Aided Courses), உதவி பெறா பாட வகுப்புகள் (Un aided Courses in aided Colleges) மற்றும் சுயநிதிக் கல்லூரி பாட வகுப்புகளுக்குரிய (self – financing Courses in SF Colleges) கல்விக் கட்டணங்களை உறுதி செய்திட, “கல்விக்கட்டணக் குழுவினை (Fee Fixation Committee) உடனே அமைத்திட வேண்டும் என தீர்மானிக்கலாகிறது.
பொதுநிதியில் உருவாக்கப்பட்டுள்ள அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை, தனியார் சுரண்டலுக்கு பயன் படுத்தப் படுத்துவதை தடுக்கும் நோக்கில், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் (Aided Colleges), “உதவி பெறா பாட வகுப்புகள்” (Un- aided Courses offered in Aided Colleges) நடைபெறுவதை, (கேரள அரசு தடை செய்துள்ளது போல்) தடை செய்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் பணிமேம்பாட்டினை (CAS) நிலுவைத் தொகையுடன் உடனே வழங்கிட வேண்டும்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் உறுப்புக் கல்லூரிகளின் 116 ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு, 8 மாத ஊதியத்தை உடனே வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2016 ல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, CAS வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
அரசு ஆணைகள்/விதிகளை மீறி, செயல்பட்டுவரும் தனியார் கல்லூரி நிர்வாகங்களின் தன்னிச்சையான போக்கினை தடுத்திட, அரசாணை எண் 1021 ன்படி, எல்லைகளை விரிவுபடுத்தி, அரசு விதிகளை மீறி செயல்படும் கல்லூரிகளின் “கல்லூரிக்குழுவினை”, “இடைநீக்கத்தில்”இருத்தி, (College Committee/Governing Council under Suspension) இணை இயக்குநர்களை “இடைக்கால நிர்வாகிகளாக”, (Interim Administrators) நியமித்து, ஆசிரியர்கள் – அலுவலர்களுக்குரிய ஊதியத்தினை, “நேரடியாக வழங்கிட“ (Direct Payment of Salary) உரிய திருத்த அரசாணையினை” உடனே வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது!
மண்டலக் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலங்களில் ஆசிரிய, அலுவலர் கோப்புகளில் கையெழுத்திட அனைத்து நிலைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பணம் இலஞ்சமாகக் கொடுத்தால்தான் கோப்புகள் நகரும் நிலை அனைத்து மண்டலங்களிலும்இது எழுதப்படாத நீதிஆக உள்ளது.
கோப்புகள் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் வேகமாக நகருகிறது. பணம் கொடுக்கவில்லை என்றால் கிடப்பில் போடப்படுகிறது. இந்த இழிநிலை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
அனைத்து மண்டலக்கல்லூரி இணை இயக்குநர் அலுவலகங்களிலும் “லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!” என்ற வாசகங்கள்! ஆனால் நடப்பதோ நேர்மாறாக!. அரசு இதில் தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றுகிறது
M.Phil., Ph.D. பட்டங்களுக்கான ஊக்க ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் புதிதாக பணி நியமனம் பெற்ற உதவிப் பேராசிரியர்களுக்குரிய மாத ஊதிய நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்கிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
ஈட்டிய விடுப்பு ஒப்பளிப்புக்கான (EL Surrender) ஊதியம் பெறுவதை உறுதி செய்திட தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
சென்னை தியாகராயா , பச்சையப்பன் . டி.பி.ஜெயின், சேலம் சௌடேஷ்வரி உள்ளிட்ட அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி நிர்வாகங்களின் விதிமீறல்கள் குறித்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் புகார்கள்/கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்
ஓராண்டு பணி நீட்டிப்பு பெற்றுள்ள, சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகன்னாதனின் பழிவாங்கும் நடவடிக்கையான பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் கே. பிரேம்குமார் அவர்களின் 2022 மார்ச் முதல் இன்று வரை 27 மாதங்களுக்கு மேலான பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைககளை இரத்து செய்து உடனடியாக பேரா. பிரேம்குமார் அவர்களை மீளப்பணியில் அமர்த்திட வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது.
பணிமேம்பாட்டினை வழங்காமல், பழிவாங்கும் நோக்கோடு, ஆசிரியர்களை புத்தாக்க/புத்தொளிப் பயிற்சி செல்ல அனுமதி மறுக்கும், ஆசிரியர் விரோதபோக்குடன் செயல்படும் பச்சையப்பன் அறக்கட்டளை சார்ந்த கல்லூரிகள் மற்றும் சேலம் செளடேஸ்வரி கல்லூரி உள்ளிட்ட கல்லூரி நிர்வாகங்களின் மீது உரிய நடவடிக்கையெடுத்திடவும் பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு விதிமீறி மறுக்கப்பட்டுள்ள அகவிலைபடி உயர்வு மற்றும் நிலுவை தொகையை உடனே வழங்க உத்தரவிடக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
பச்சையப்பன் அறக்கட்டளைக்கீழ் இயங்கும் கல்லூரிகளில் பணியாற்றி வரும் பெண் பேராசிரியர்கள் செயலாளர் துரைக்கண்ணு என்ற நபரால் பல்வேறு இன்னல்களை (பணிமாற்றம், பாலியல் சீண்டல்கள், பணிமேம்பாட்டிற்கான புத்தொளி, புத்தாக்கப் பயிற்சிகளுக்கு மறுப்பு, மூத்தப்பேராசிரியர்கள் ஓய்வு பெறும் போது இடைநீக்கம், விசாரணை, ஓய்வூதியம் பெறவிடாமல் அலைக்ககழிப்பது, கௌரவ விரிவுரையாளர்களை பணிநீக்கம்செய்து அந்த இடத்தில் இந்த நபருக்கு வேண்டிய தகுதியில்லாத நபர்களை பணியில் அமர்த்துவது….) சந்தித்து வருகின்றனர். பல்கலைக்ககழகங்களிலும், பல்வேறு கல்லூரிகளிலும் பெண்கள் சுயமரியாதையுடன் பணிபுரியும் சூழல் மறுக்கப்பட்டு மனஉளைச்சலுடன் இறுக்கமாக பணிபுரியும் சூழலில் மகளிர் பணிபாதுகாப்பையும் சுயமரியாதையையும் உறுதி செய்ய மகளிர் நலன் நாடும் அரசின் தலையீடு வேண்டி மகளிர் பேராசிரியர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் போராட்டத்தை நடத்துவது என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
ஆசிரியர், மாணவர் விரோதப் போக்கை கடைபிடித்து நாளும் பணிநீக்கம், இடைநீக்கம், பணிமாற்றம் என ஆசிரியர்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி வரும் பச்சையப்பன் அறக்கட்டளைச் செயலர் துரைக்கண்ணு, அவரது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தாமல் துணைநிற்கும் இடைக்கால நிர்வாகிகள் இவர்களை தேர்தல் நடத்தக்கோரியும், துரைக்கண்ணுவை நீக்கக் கோரியும் நடைபெறும் போராட்டங்களுக்கு போராட்டக்குழு அமைக்கப்படுகிறது. போராட்டக்குழுவிற்குத் தலைவராக பேராசிரியர். அய். இளங்கோவன் அவர்களையும், செயல் தலைவராக பேராசிரியர். பசுபதி அவர்களையும் நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
மேற்கண்ட 20 தீர்மானங்கள் எமது பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
Related Posts
Felicitation to Retired Teachers (2022-2024) on 25.08.2024 at Vellalar College for Women, Erode.
Excellent.